தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விஷ்ணுவர்தன், குறும்பு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் & ஆர்யா மற்றும் பரத் நடித்த பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வளர்ந்தார்.

அடுத்ததாக தல அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக தமிழில் நடிகர் ஆர்யா மற்றும் கிருஷ்ணா இணைந்து நடித்த யட்சன் திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்ததாக தற்போது பாலிவுட்டில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கார்கில் போரை மையப்படுத்திய கதைகளமான ஷேர்ஷா பாலிவுட் திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். கார்கில் போரில் இந்திய நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து போராடிய பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரான விக்ரம் பத்ராவின் போர் கால அனுபவங்களை அடிப்படையாக வைத்து தயாராகி இருக்கும் இப்படத்தில் விக்ரம் பத்ராவின் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். 

விக்ரம் பத்ரா மற்றும் விஷால் பத்ரா என்னும் இரட்டை சகோதரர்களின் கதாபாத்திரமாக இரட்டைவேடங்களில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மா புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் ஷேர்ஷா திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் முதல் பாலிவுட் திரைப்படமான ஷேர்ஷா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில்  ஷேர்ஷா திரைப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியானது. அதிரடியான இந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.