தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிலம்பரசன்.T.R கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர்ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் அனைவரது கவனத்தையும் பெற்றது. கடைசியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளிவந்த பாவக் கதைகள் வெப் சீரிஸில் லவ் பண்ணா உட்ரனும் என்ற எபிசோடை இயக்கினார்.

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியை  இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர படத்திலோ அல்லது வேறு விளம்பர படத்திலோ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோனி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.