தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என தொடர் வெற்றி திரைப்படங்கள் கொடுத்து வந்த  இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் இயக்குனர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் S.A.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் மாநாடு படத்தின் பாடல்கள் மற்றும் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

இதுவரை 9 திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபுவின் 10-வது திரைப்படமான அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு  தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். 

#VP10 A Venkat Prabhu QUICKIE என குறிப்பிட்டு இயக்குனர் வெங்கட்பிரபு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே விரைவில் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனது பத்தாவது திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப்சீரிஸையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.