கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். பல வெற்றி படங்களை இயக்கியுள்ள சுசீந்திரன் நடிகர் சிம்புவை வைத்து எடுத்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது.

படத்தை பார்த்த பலரும் சுசீந்திரனை பாராட்டியுள்ளனர். குடும்பத்துடன் பார்த்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறந்த படம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்வரனுக்கு நல்லபடியாக விமர்சனம் வருவதை பார்த்து சுசீந்திரன் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் சுசீந்திரன் வீட்டில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு வயது 62. இந்த செய்தி அறிந்த சிம்பு ரசிகர்கள் சுசீந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுசீந்திரனின் தம்பி சரவணன் தங்கள் தந்தை நல்லுசாமியின் பெயரில் நல்லுசாமி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுசீந்திரனுக்கு சரவணன் தவிர்த்து மேலும் ஒரு சகோதரரும், சகோதரியும் இருக்கிறார்கள். ஜெயலட்சுமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.

நேற்று தான் படம் ரிலீஸ் அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நிகழ வேண்டுமா என்று திரைப்பிரபலங்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர். சினிமா ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் சுசீந்திரன் மற்றும் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.