தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படங்கள் என்றாலே கட்டாயம் இயக்குனர் சுந்தர்.C-யின் பெயர் அந்தப் பட்டியலில் முதன்மையில் இருக்கும். ஃபேமிலி என்டர்டெய்னர் காமெடி ஹாரர் காமெடி மாஸ் கமர்சியல் என அனைத்திலும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.C-யின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்  ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்தது அரண்மனை. இதன் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை2 வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக அரண்மனை3 தயாராகிவருகிறது. நடிகர் ஆர்யா இயக்குனர் சுந்தர்.C, நடிகை ராஷி கண்ணா, ஆன்ட்ரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா, சம்பத், வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இவர்களுடன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

ஆவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் தயாராகும் அரண்மனை 3 படத்திற்கு ஒளிப்பதிவாளர் U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய C.சத்யா இசையமைத்துள்ளார் முதல் முறையாக பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் சுந்தர்.C-யுடன் இணைந்துள்ளார்.

அரண்மனை 3 க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் சுமார் 1.5 கோடி செலவில் 300 தொழிலாளர்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த அரண்மனை செட்டில்  200 கலைஞர்களோடு 16 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த ஆண்டு இதன் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்ற நிலையில் கடந்த 6 மாதமாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் விரைவில் அரண்மனை 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்போடு அரண்மனை 3 பிரத்யேக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் அரண்மனை சீரிஸில் அரண்மனை 3 திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.