சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்த சூரரைப் போற்று படம் கடந்த மாதம் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் சூர்யாவின் நடிப்பால் மிரண்டு போனார்கள். படத்தை சூர்யா தன் தோளில் தாங்கியதாக பாராட்டினார்கள். திரையுலகினர், ரசிகர்கள் என்று பலரும் சூரரைப் போற்று படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டினார்கள். 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூரரைப் போற்று படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ஷங்கர் கூறியிருப்பதாவது, சூரரைப் போற்று திரைப்படத்தை அண்மையில் ரசித்தேன். ஜி.வி. பிரகாஷின் ஆத்மார்த்தமான இசையுடன் இருந்தது சூரரைப் போற்று படம். 

அந்தகாரம் படத்தில் எட்வின் சகாயின் அருமையான ஒளிப்பதிவு, மலையாள படமான ஜல்லிக்கட்டில் பிரசாந்த் பிள்ளையின் வித்தியாசமான பேக்கிரவுண்ட் ஸ்கோர் என்று அவரது பதிவில் மற்ற படங்களை ரசித்தது குறித்தும் பதிவு செய்துள்ளார். 

சூரரைப் போற்று படத்தை பாராட்டியதற்கு நன்றி சார் என்று சூர்யாவின் ரசிகர்களும் கமெண்ட் போட்டுள்ளனர். ஷங்கரின் ட்வீட்டை பார்த்த சினிமா விரும்பிகளோ, இந்தியன் 2 படப்பிடிப்பை எப்பொழுது மீண்டும் துவங்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தபோது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். அதன் பிறகு நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. நடுவே கொரோனா வைரஸ் சிக்கலால் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. 

24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர்.