தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குனராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் என இந்திய திரையுலகம் மெச்சும் அளவிற்கான திரைப்படங்களை வழங்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். சீயான் விக்ரமுடன்  அந்நியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படங்களுக்கு பிறகு பாக்ஸ் ஆபீஸின் உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்த ஷங்கர் தனது கனவு திரைப்படமான எந்திரன்-ஐ உருவாக்கினார். எந்திரன் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு சியான் விக்ரமின் கடின உழைப்பிலும் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டத்திலும் உருவான திரைப்படம்  கலவையான விமர்சனங்களை பெற்றது. பிறகு மீண்டும் எந்திரன்-ஐ கையில் எடுத்த இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து உருவாக்கிய 2.O திரைப்படம்  மீண்டும் இயக்குனர் ஷங்கர்தான் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்தது.
 
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. திருமணத்தில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முதல்வருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டனர். 

தன் இல்லத் திருமணத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஷங்கர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தன்னுடைய பொன்னான நேரத்தில் என் மகளின் திருமணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்து எங்களை அன்போடு வாழ்த்திய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.