இந்திய திரை உலகின் மிக பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 2.O. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குனர் ஷங்கர் இரண்டாவது முறையாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன்-2 திரைப்படத்தை தொடங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று, படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படங்களில் கவனத்தை செலுத்தினார். முன்னதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் உடன் இணைந்து #RC15 திரைப்படத்தில் சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கினார். 

தொடர்ந்து தமிழில் மெகா ஹிட்டான அந்நியன் திரைப்படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க ரீமேக் செய்கிறார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்குகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் விருமன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார். 

விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். எனவே நடிகை அதிதி ஷங்கர் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தனது திரைபபயணத்திற்கான ஆசிர்வாதத்தை பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதனை நடிகை அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.