தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து  காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து இவரது இயக்கத்தில், கார்த்தி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தனுஷின் மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடைசியாக நடிகர் & இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கிய செல்வராகவன் தற்போது நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ள இயக்குனர் செல்வராகவன் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலும் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் செல்வராகவன் விரைவில் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலை வணக்கம்!, எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-3 நாட்களில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு தனிமையில் இருக்கவும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து பாதுகாப்போடு இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.