சமூக ஊடகத்தில் ஏற்பட்ட பிழை குறித்து தெளிவு செய்த இயக்குனர் சீனு ராமசாமி !
By Sakthi Priyan | Galatta | October 07, 2020 10:40 AM IST
மனிதர்களின் வாழ்க்கையில் பிரம்மாண்டமாக நுழையும் எதுவும் கூடவே சாபத்தைக் கொண்டுவராமல் இருப்பதில்லை. இணையம், செல்பேசித் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் போன்ற அம்சங்கள் அனைத்தும் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று கூறலாம். கூகுள், ஜிமெயில் தொடங்கி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூட்யூப், பின்ட்ரஸ்ட் வரையிலான சேவைகளில் ஒன்றையாவது பயன்படுத்தாத மனிதரை இன்று நாம் ஆதிவாசியாகவே கருத முடியும். தகவல்தொடர்பு, பணப் பரிமாற்றம் தொடங்கி உணவு, உடை, மருத்துவம் வரை 24 மணிநேரமும் நம் கண்களில் ஏதாவது ஒரு வழியாக தென்பட்டு தான் வருகிறது.
காலத்திற்கு ஏற்றார் போல் மனிதர்கள் நாம் அப்டேட் ஆகி வருவது போல், கேஜெட்டுகள் மற்றும் சாதனங்கள் அப்டேட்டாகி வருகின்றன. இதனால் ஆபத்து என்னவென்றால், நம் பிறப்பு தேதி துவங்கி கல்யாண தேதி வரை அனைத்தும் அப்டேட்டாகி சமீபத்தில் நடக்கும் நிகழ்வு போல் பதிவாகிறது. பிரபலங்கள் இந்த பிரச்சனையை சந்திப்பது வழக்கமாகி விட்டது. முன்பெல்லாம் பிரபலங்களின் சமூக வலைத்தள அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டால் மட்டுமே பெரிதாக பேசுவார்கள். தற்போது அப்டேட் ஆனால் கூட அந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் இணையவாசிகள்.
இயக்குனர் சீனு ராமசாமியின் அக்கௌன்ட் அப்டேட் ஆனதால், புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று திடீரெனெ சீனு ராமசாமி Got Married எனும் ஸ்டேட்டஸ் டைம்லைனில் தெரியவந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், என்ன இயக்குனருக்கு திருமணமா என கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனை தெளிவு செய்யும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளார் சீனு ராமசாமி. அவர் கூறியிருப்பதாவது; இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம் என்று கூறியுள்ளார்.
எதார்த்தமான படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த இவர் தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படங்களை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார்.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.
சமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். மேலும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சீனு ராமசாமி.
இது தவறான தகவல்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHX