ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தனது படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழில் வெற்றிபெற்று தெலுங்கிலும் ரீமேக்கானது. இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ்ப் படங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது ராட்சசன். அதே போல் இந்தியப் படங்கள் வரிசையில், ராட்சசன் படத்துக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. 

சமீபத்தில் DRS வித் ஆஷ் எபிசோடில், தனது திரைப்பயணம் பற்றியும், கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும் பகிர்ந்துகொண்ட விஷ்ணு, ராட்சசன் படத்தின் கதையை 17 ஹீரோக்கள் மற்றும் 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்து அதற்குப் பிறகு தான் தன்னிடம் வந்தது என்று பகிர்ந்து கொண்டார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் அன்பு தொல்லை செய்ய, தரமான பதிவை செய்துள்ளார் விஷ்ணு. அதில் ராட்சசன் 2 ஸ்கிரிப்ட் ரெடியா என்று இயக்குனர் ராம்குமாரை டேக் செய்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ராம்குமார், போய் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் நிச்சயம் இரண்டாம் பாகம் வரும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள். 

இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் கைவசம் FIR திரைப்படம் உள்ளது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார்.

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு.