தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராம், தமிழில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்கமீன்கள் திரைப்படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

மேலும் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு திரைப்படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய முக்கிய திரைப்படங்களாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதனையடுத்து தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R.  கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் V ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். 

மேலும் நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், “தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களோடு ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்” என குறிப்பிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.