குக்கூ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ராஜுமுருகன் அடுத்ததாக ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். மிகுந்த சமூக பொறுப்புள்ள எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. 

கடைசியாக இவர் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நிகழ்கால இந்தியாவில் நடைபெறும் பல சமூக, அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி  பேசியது. சர்ச்சைக்குள்ளான பல வசனங்களும் காட்சிகளும் இருந்த காரணத்தினால் சென்சார் குழு இத்திரைப்படத்தில் பல பகுதிகளை வெட்டி நீக்கியது. ஆனாலும் சென்சார் குழுவால் நீக்கப்பட்ட காட்சிகளை பகிரங்கமாக YouTube-ல்  இயக்குனர் ராஜுமுருகன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குனர் ராஜூ முருகனின் குடும்பத்தில் தற்போது சோகம் சூழ்ந்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் இயக்குனர் ராஜூ முருகனின் உடன் பிறந்த சகோதரர் திரு.குமரகுருபரன்  சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது திரு.குமரகுருபரன் உயிரிழந்துள்ளார். நடிகரும் பத்திரிகையாளருமான திரு.குமரகுருபரன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இயக்குனர் ராஜூ முருகனின் சகோதரர் திரு.குமரகுருபரன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.