தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன், தனக்கே உரித்தான பாணியில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர். தனித்துவமான கதை களங்களும் நயமான வசனங்களும் கொண்ட பார்த்திபனின் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் தனிச்சுவை தான்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும்  வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் நடித்து தன் முத்திரையைப் பதித்து விடுவார் பார்த்திபன். குறிப்பாக இயக்குனர் தங்கர்பச்சானின் அழகி, இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்,இயக்குனர் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடி தான் என  நடிப்பிலும் பல வெரைட்டிகளைக் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் நடிகர் பார்த்திபனின் திரைப்பயணத்தின் மணிமகுட திரைப்படமாக வெளிவந்தது ஒத்த செருப்பு. சாதனை முயற்சியாக ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்து அவரே இயக்கிய திரைப்படமாக வெளிவந்த பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. ஏதோ சாதனை முயற்சியாக செய்தது போல் அல்லாமல் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பையும் வசனங்களில் அழுத்தத்தையும் வைத்து  தேசிய விருதையும் பெற்றார் பார்த்திபன்.

இந்நிலையில் தற்போது பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் நடிக்கும் ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.