நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் நாளை (அக்டோபர்-9) திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ் திரையுலகில் இன்று முன்னணி கமர்சியல் கதாநாயகனாக உயர்ந்து நிற்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். 

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில்,டி.இமான் இசையில்,வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று மெகா ஹிட்டானது. சிவகார்த்திகேயனும், சத்யராஜும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரியும் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யாவும் நடித்திருந்தனர்.சிவகார்த்திகேயன்-சூரி காம்போவில் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளும் திரையரங்குகளில் சரவெடிகளாக வெடித்தது. 

வசூலிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு முன்னணி கதாநாயகன் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. இப்படத்தின் 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இயக்குனர் பொன்ராம் அது குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக டாக்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயனிடம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசினோம்... ஆனால் அந்த படத்தின் 2-ம் பாகம் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்... அது ஒரு எபிக் படம்... அதைத் திரும்ப எடுக்க முடியாது..! என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பேசியதை குறிப்பிட்டு, “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம் போட்றா வெடிய…”  என தெரிவித்துள்ளார். எனவே விரைவில் படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.