நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவத்தால், மனம் நொந்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிவிப்பு சாட்டை அடியாக விழுந்து சர்ச்சையையும் கிளப்பியது. நீதிபதிகளை அவதூறாக பேசிவிட்டார் என அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தேவையில்லை என ஓய்வு பெற்ற நீதிபதிகளே ஆதரவு தந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

'நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது என தொடங்கும் அந்த கட்டுரையில், நீதித்துறை, அரசியல்வாதிகள், சமூகம் என பலவற்றையும் சூர்யா தனது கேள்விகளால் விளாசி இருந்தார்.

நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என ஏகப்பட்ட பேர் களமிறங்கி #IStandWithSuriya என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். சூர்யாவின் இந்த கட்டுரையை படித்த மூடர்கூடம் இயக்குனர் நவீன், இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும் என தனது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நவீனின் இந்த பாராட்டு ட்வீட்டில், நடிகர் சூர்யாவை நேரடியாக அரசியலுக்கு அவர் அழைப்பது போன்றே உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும் என்ற வரிகளும் அதனை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. தற்போது விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார்.