தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவரான மோகன் ராஜா அவர்களின் இணை இயக்குனரும் லாக் அப் படத்தின் இயக்குனருமான SG சார்லஸ் இயக்கத்தில் ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் ஹூபாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மமுதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் G.பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்ய K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். சொப்பன சுந்தரி திரைப்படத்தின் பாடல்களுக்கு அஜ்மல் தஷீன் இசையமைத்துள்ள நிலையில், ‘சீதாராமம்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை சேர்த்துள்ளார். இப்படத்தின் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளுடனான சொப்பன சுந்தரி டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா மாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது விழாவில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினரும் இயக்குனர் SG சார்லஸ் அவர்களின் குருவும் ஆன மோகன் ராஜா கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர். "எனக்கு சார்லஸ் ரொம்ப முக்கியமான ஆள். ‘வேலைக்காரன்’ படம் நல்லா வர முழுக்க முழுக்க முக்கிய காரணம் அவர் தான். நான் இங்க வந்தது அவர வாழ்த்துவதை விட அவருக்கு நன்றி சொல்லதான் வந்தேன். இந்த படம் நல்லா வரும்ன்னு பிரபு வெச்சிருக்க நம்பிக்கையில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.. எனது இயக்குனரை ஏற்றுகொண்டதற்கு படக்குழுவினருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்." என்றார் இயக்குனர் மோகன் ராஜா
மேலும் படங்களின் விமர்சனங்களை பார்த்து படம் பார்க்க வருபவர்கள் குறித்து, "மொக்கை படம் பார்க்குறது தப்பே இல்லை..படம் எப்படி இருக்குனு தெரியாம போய் நீங்க முடிவு பண்ணனும் அதுக்குதான் நாங்கள் உழைத்து கொண்டிருக்கின்றோம். விமர்சம் பார்த்துட்டு படம் பார்ப்பேன் என்ற டிரெண்டை பார்வையாளர்கள் மாத்தினால் நல்லா இருக்கும். விமர்சனங்களினால் நிறைய நல்லது நடக்குது.. அதே நேரத்தில் பல விமர்சகர்கள் சிறு படங்களை பார்த்து அதை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்" என்றார்.
மேலும் அதை தொடர்ந்து தனி ஒருவன் படம் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்விக்கு, "இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் கண்டிப்பா அதற்கான வேலை ஆரம்பிக்கப்படும்" என்றார் இயக்குனர் மோகன் ராஜா. விழாவில் பேசிய மோகன் ராஜா வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்பதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்