இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற இசை சக்கரவர்த்தியாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாய் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இன்று (ஜனவரி 6) தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகெங்கும் உள்ள அவரது கோடானகோடி ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. முன்னதாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், தமிழில் சீயான் விக்ரமின் கோப்ரா,பார்த்திபனின் இரவின் நிழல், சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்

மேலும் மலையாளத்தில் ஃபகத் பாசிலின் மலையன் குஞ்சு, பிரித்விராஜின் ஆடுஜீவிதம் மற்றும் பாலிவுட்டில் ஹீரோபன்டி, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம், ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் ரீமேக் ஆகிய படங்களுக்கும் இசைப்புயலின் இசைதான்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “சந்தோஷ கண்ணீரே சந்தோஷ கண்ணீரே தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே HAPPY BIRTHDAY ஏ.ஆர்.ரகுமான் SIR” தெரிவித்துள்ளார். 

நீண்ட நாட்களாக மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற பேச்சு சினிமா வட்டாரங்களில் நிலவி வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக மாரிசெல்வராஜ் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரா? என்றும் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.