சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த லாக்கப் டெத் சம்பவத்தை தமிழகத்தில் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.போலீசார் தங்கள் பதவியை பயன்படுத்தி அப்பாவிகளை துன்பப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் பல இடங்களில் இது குறித்து போராட்டங்கள்,சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த வழக்கில் உடனடி தீர்வு வேண்டும் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தங்கள் வாழக்கையில் போலீசால் நடந்த சில கசப்பான சம்பவங்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இயக்குனர் ஹரி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள இவர் தான் போலீசை பெருமை படுத்தும் விதமாக எடுத்த சிங்கம்,சாமி உள்ளிட்ட ஐந்து படங்களை எடுத்ததற்கு இன்று மிகவும் வேதனைப்படுகிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஹரி.