வைகை புயல் நடிகர் வடிவேலுவின் 60வது பிறந்தநாள் இன்று. சமீபத்திய வருடங்களாக சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டாலும், அவரது பழைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களால் மீமாக தொடர்ந்து உலவி கொண்டு தான் இருக்கிறது. எனக்கே எண்டே கிடையாது என ஒரு காமெடியில் அவர் கூறுவது போலவே வடிவேலுவின் ஒப்பற்ற காமெடிக்கு இருக்கும் மதிப்பு சற்றும் குறையவே இல்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவருடைய டைமிங் டயலாக்குக்கும் பாடி லாங்குவேஜூக்கும் ஏகோபித்த ஃபேன்ஸ்.

எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை நிரப்ப முடியாது என கூறி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் வடிவேலுக்கு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனரான சேரனும் நடிகர் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடிவேலுவை வித்தியாசமாக பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும் நடிகர் நாகேஷுக்கு பிறகு தனக்கு பிடித்த நடிகர் வடிவேலுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், வடிவேலு .. திரு நாகேஷ் அவர்களுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காமெடி நடிகர்.. இன்று உலகம் முழுதும் மீம்ஸ் மூலமும் கொடிகட்டி பறக்கும் வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் இடம் அப்படியே இருக்கிறது பங்காளி.. வாங்க மீண்டும் நடிக்க.. என குறிப்பிட்டுள்ளார்.

சேரன் வடிவேலுவை வெற்றிக்கொடி கட்டு படத்தில் இயக்கி இருக்கிறார். வடிவேலு கெரியரில் மிக முக்கிய படங்களில் அதுவும் ஒன்று. துபாயில் இருந்து திரும்பி வந்தவராக வடிவேலு அதில் நடித்து இருப்பார். அதன் காமெடி காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. தற்போதும் அந்த காமெடி காட்சிகளின் புகைப்படங்கள் பல மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப் பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாய் எந்தப் படத்திலும் நடிக்காமல் உள்ளார் வடிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.