தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா42 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வணங்கான். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

சூர்யா உடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி மற்றும் மமீதா பைஜூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வணங்கான் படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலாவை சந்தித்த செய்தியாளர்கள் வணங்கான் திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வதந்திகள் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு தனக்கே உரித்தான பாணியில் இயக்குனர் பாலா பதிலளித்துள்ளார்.

“வணங்கான் படம் எப்படி வந்திருக்கு..?” என செய்தியாளர் கேள்வி கேட்க, “வந்திருக்கு இல்ல வந்துட்டே இருக்கு..” என பாலா பதிலளித்தார். தொடர்ந்து “ஏதோ பிரச்சனையாமே..?” என செய்தியாளர் கேட்க, “ஆமாம் உங்களுக்கும் எனக்கும் தான் பிரச்சனை” என தனக்கே உரித்தான ஸ்டைலில் இயக்குனர் பாலா பதிலடி கொடுத்துள்ளார். எனவே வணங்கான் திரைப்படத்தில் பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாலா . தொடரந்து வெகு விரைவில் வணங்கான் திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.