தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லீ. முதல் படத்திலேயே முத்திரை பதித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். ஆர்யா, ஜெய், நயன்தாரா , நஸ்ரியாவை வைத்து ராஜாராணி என்ற படத்தை இயக்கினார். 

இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து தளபதி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இயக்குனர் மட்டுமின்றி அந்தகாரம் உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

பிகில் பட வெற்றிக்குப் பின் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தனது பெரியப்பா மறைந்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.

அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது, என் பெரியப்பா நீதிபதி சவுந்திர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது. எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். பெரியப்பா நீங்கள் எப்போதும் எங்கள் அரசர், எங்களின் முன் மாதிரி. உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார்.

சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இயக்குனர் அட்லீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினர் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்திருக்கும் சோகம் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.