திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இயக்குனர் ஷங்கர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல், தளபதி விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், அந்நியன் கதையை சுஜாதாவிடம் இருந்து தான் வாங்கிவிட்டதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்நியன் படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதம் என்று கூறியும் இயக்குனர் ஷங்கருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார் ஷங்கர். அதில், அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்நியன் படத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் அறிவழகன், அந்நியன் கதை விவகாரத்தில் தான் ஷங்கர் சாருக்கு ஆதரவாக இருப்பதாக பதிவு செய்துள்ளார். ISupportDirectorShankar என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ள அறிவழகன், இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட அறிக்கையையும் பகிர்ந்துள்ளார். 

இயக்குனர் அறிவழகன், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஈரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய போன்ற படங்களை இயக்கியுள்ளார். அறிவழகன், தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் முதல் லுக் நேற்று வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.