மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த நட்பே துணை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனகா. சமீபத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த டிக்கிலோனா படத்திலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் பபூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பபூன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அனகா கதாநாயகியாக நடித்திருக்கும் அடுத்த  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. தல அஜித் குமார் நடித்து மெகா ஹிட்டான சிட்டிசன் மற்றும் ABCD ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில், ஹீரோ சினிமாஸ் C.மணிகண்டன் வழங்கும் "மீண்டும்" திரைப்படத்தில் நடிகர் கதிரவன் மற்றும் அனகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவில், நரேன் பாலகுமார் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். வரும் அக்டோபர் 15ஆம் தேதி “மீண்டும்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் இன்று "மீண்டும்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.