திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். ஆதித்ய வர்மா படம் நல்ல வசூலையும் ஈட்டியது. சிறந்த அறிமுக நாயகன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றார் துருவ். 

இந்நிலையில் துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. துருவ்-ன் பதிவில் இந்த அழகான மனிதரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது என்பதும் இந்த புகைப்படம் இணையதளங்களில் இரு தரப்பின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

துருவ் கைவசம் சியான் 60 திரைப்படம் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு இம்மாதம் மார்ச் 10-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார். வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனத் போன்ற நடிகர்கள் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

கர்ணன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் துருவ் விக்ரம். 

உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு ஆகிய தகவல்களை துருவ் விக்ரம் தெரிவிக்கவில்லை. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் செய்திகள் இணையத்தில் வலம் வருகிறது.