நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றார் நடிகர் தனுஷ். அமெரிக்காவில் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. 

தனுஷ் ஏற்கனவே எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகீர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ஆன்டனி, ஜோ ருஸ்ஸோ இயக்கும் தி கிரே மேன் படம், மார்க் கிரேனி எழுதிய ஆக்ஷன், திரில்லர் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படம் பற்றி மார்க் கிரேனி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

இந்த படத்தில் தனுஷ் நடிப்பது பற்றி ஆச்சரியம் தெரிவித்த அவர், இதில் தனுஷ் நடிக்கும் வேடம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோருடன் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டம் ஒன்றின் தலைவனாக தான் தனுஷ் நடிக்க போகிறார். 

முன்னாள் சிஐஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடிக்க உள்ளார். தனுஷ் பற்றி பேசிய மார்க் கிரேனி பேசுகையில், என்னை கவர்ந்த தென்னிந்திய நடிகர் தனுஷ். அவரடன் பழகியது கிடையாது. இந்த படத்தில் அவர் கொலையாளிகளின் தலைவர் வேடத்தில் தான் நடிப்பார் என நினைக்கிறேன்.

ட்விட்டரில் என்னை 6000 பேர் பின் தொடர்கிறாரகள். அதில் எந்த ஸ்பெஷலும் இல்லை. ஆனால் இந்திய நடிகரான தனுஷ் என்னை பின்தொடர்வது தான் பெரிய விஷயம். அவரை 9.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அது மிகப் பெரிய விஷயம் என்றார்.

நடிப்புலகின் அசுரனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடிக்கவுள்ளார். தனுஷ் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கி வந்த D43 படத்தில் நடித்து வந்தார்.