தனது கடின உழைப்பாலும் சிறந்த நடிப்பாலும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சிறந்த நடிகர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். மொழிகளைத் தாண்டி பலதரப்பட்ட ரசிகர்களும் ரசிக்கப்படும் தனுஷ் தற்போது தமிழில் மட்டுமல்லாது பன்மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

முன்னதாக பாலிவுட்டில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் என்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ள தி க்ரே மேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

அடுத்ததாக முதல்முறை தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக தயாராகும் வாத்தி படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழில் வாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் SIR என்ற பெயரிலும் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

மேலும் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்துள்ள நடிகர் தனுஷ் கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் நானே வருவேன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் மாறன். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, அமீர், ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள மாறன் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த மாறன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மாறன் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில், இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தனுஷின் மாறன் திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜனவரி 14) மாலை 6 மணிக்கு மாறன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.