தமிழ் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் படங்களில் பிஸியாக இருந்தாலும் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பின் அசுரனாக திகழும் தனுஷின் தி கிரே மேன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அன்மையில் அறிவிக்கப்பட்ட 2019-ஆம் வருடத்துக்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாக அசுரன் தேர்வானது. இதேபோல் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருந்தார். 

மார்க் கிரேனி என்பவர் எழுதிய தி கிரே மேன் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் அதிரடி ஹாலிவுட் படமாகும். இப்படத்தை ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார். 

ஜுன் மாதம் தான் தனுஷ் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. தற்போது கலிபோர்னியாவில் குடும்பத்தினருடன் அவர் நேரத்தைப் போக்கும் வீடியோ ஒன்றும், சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் மார்க் கிரேனி, தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் குறித்த தகவலை வெளியிட்டார். இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று கூறியிருந்தார். 

மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த பின்னர் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்ததை அடுத்து மாரியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைவதாகவும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.