மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

கண்டா வரச் சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு பாடல்களுமே கர்ணன் படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், விரைவில் டீஸர் வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் படத்தின் மூன்றாம் பாடல் திரௌபதையின் முத்தம் பாடலின் அறிவிப்பு வெளியானது. மார்ச் 11-ம் தேதி இந்த பாடல் வெளியாகவுள்ளது. 

கர்ணன் படத்திற்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்பால் விநியோக உரிமைகள் அனைத்துமே பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஏரியாவின் விநியோக உரிமையுமே தனுஷின் முந்தைய படங்களின் உரிமையை விட அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தாணு, படத்தின் வெளியீட்டின்போதே லாபத்தில் இருப்பார் என்று கூறிவருகிறது திரையுலகம். 

தற்போது தி க்ரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.