கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது என நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கும், உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் தாணுவுக்கும், உடன் நடித்த நடிகர்களுக்கும், பிரமாதமான இசையை தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் தனுஷ். 

கர்ணன் படம் தொடர்பாக வெளியான இந்த அப்டேட், தனுஷ் ரசிகர்களுக்கு தித்திக்கும் செய்தியாக மாறியுள்ளது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கர்ணன் ஷூட்டிங் நடைபெற்றது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படத்தில் ஜகமே தந்திரமும் ஒன்று. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதும் ஏற்கனவே முடிந்து விட்டது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தியேட்டர் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.