இந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ள தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் அட்லுரி இயக்கத்தில் தயாராகும் வாத்தி (SIR) படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனது சகோதரரும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவருமான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள தி க்ரே மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் மாறன். விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாக உள்ள மாறன் திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறன் படத்திற்கு விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் பிரசன்னா.G.K படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக மாறன் படத்தின் முதல் பாடலாக "பொல்லாத உலகம்" பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள "அண்ணன தாலாட்டும்" பாடல் நாளை (பிப்ரவரி 19ஆம் தேதி) ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.