இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படம் பொல்லாதவன். FIVESTAR CREATIONS சார்பில் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி தற்போது 15 வருடங்கள் நிறைவாகியுள்ளது.

பொல்லாதவனை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிகளில் வெளிவந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்றன. அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகர் சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொல்லாதவன் திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை பொல்லாதவன் படக்குழுவினர் கொண்டாடினர். இதில் வெற்றிமாறன், தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், பொல்லாதவன் படத்தின் 15 ஆண்டு கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, “கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு சிறந்த நண்பராக விளங்கும் தனுஷை நான் சந்திக்க காரணமாக அமைந்த பொல்லாதவன் திரைப்படத்திற்கு நன்றி!(தனுஷ் தான் என்னை பரிந்துரை செய்தார்). வெற்றி சார் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சிறந்த பின்னணி இசை ஜீவி பிரகாஷ் குமார்... பொல்லாதவன் 2- படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகை திவ்யா ஸ்பந்தனா பொல்லாதவன் 2 என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வடசென்னை 2 திரைப்படம் தனுஷ் - வெற்றிமாறன் காம்போவில் விரைவில் தயாராக இருக்கும் நிலையில், பொல்லாதவன் 2 திரைப்படமும் தயாராகுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது குறித்து வெற்றிமாறனிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகுமா என பொருத்திருந்து பார்க்கலாம்.
 

Polladhavan 15 years to the date and thanks to the film I met my longest standing friend @dhanushkraja (he suggested me for the film) through thick & thin 🤗 Vetri sir it was a pleasure, I learnt so much from you. @gvprakash best BGM ♥️♥️ look forward to Polladhavan 2 😉 pic.twitter.com/VnVkvT8m0U

— Ramya/Divya Spandana (@divyaspandana) November 8, 2022