நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக  அனேக மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற வருடம் ஊரடங்கால் திரையரங்குகள்  நலிவடைந்தது .ஊரடங்குக்கு பிறகு 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 

இதனால்  தமிழகத்தில் பல திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நலிவடைந்த பல திரையரங்குகள் திருமண மண்டபமாக மாறும் செய்திகளை அவ்வப்போது நாம் பார்ப்பது உண்டு. அந்த வகையில் சென்னையில் பிரபல முன்னணி திரையரங்குகளில் ஒன்றான தேவி திரையரங்கம் பெரும் நஷ்டத்தின் காரணமாக நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக பிரபல  நாளிதழில் செய்தி வெளியானது.இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் தற்போது இது குறித்த விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் நாளிதழில் வெளியான அந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது என்றும் கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாக இயங்கிவரும் தேவி திரையரங்கம் இன்றும் புதுப்புது தொழில்நுட்பங்களை உட்புகுத்தி பல திரைப்படங்களை திரையிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் தொடர்ந்து தியேட்டர் வளத்தையும் இதர இடங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி  அதை ரசிகர்களும் பொதுமக்களும் காணும் வகையில்  ஒளிபரப்பு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த தகுந்த ஆதாரங்களையும் இந்த அறிக்கையோடு வெளியிட்டுள்ள தேவி திரையரங்கு நிர்வாகம், வெளியான தவறான செய்தியை மேற்கோள்காட்டி அதற்கு தக்க மறுப்பு தெரிவித்து உடனடியாக செய்தி வெளியிட வேண்டுமென தாழ்மையோடு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரபல தேவி திரையரங்கம் பற்றி வெளிவந்த இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தேவி தியேட்டர் நிர்வாகம் அளித்துள்ள இந்த அறிக்கை  அனைவரையும் தெளிவுபடுத்தியுள்ளது.