பாலிவுட் திரையுலகின் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கெகாரியான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை அடுத்து ரன்வீர் சிங் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடிக்கும் சர்க்கஸ் படத்தில் தீபிகா படுகோன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் பதான் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகும் புராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களிலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாக மிக முக்கியமான  சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே 17-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து 21 திரைப்ப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் சிறந்த படத்திற்கான Palme d'Or விருதை தேர்வு செய்யும் முக்கிய நடுவர் குழுவில் ஒருவராக தற்போது நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பிரஞ்ச் நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமையில் இருக்கும் இந்த நடுவர் குழுவில் Iron man 3 பட நடிகை ரெபேக்கா ஹால், இயக்குனர் ஜேப் நிக்கோல்ஸ் உள்ளிட்ட 8 பேர் கொண்ட நடுவர் குழுவில் ஒருவராக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக இந்தியாவிலிருந்து ஐஸ்வர்யாராய், ஷர்மிலா தாகூர், நந்திதாதாஸ், வித்யாபாலன் ஆகிய நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களாக கலந்து கொண்ட நிலையில், இந்த வரிசையில் தற்போது நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.