சினிமா துறையில் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியது குறித்த சர்ச்சை வெடித்தது. கன்னட திரையுலகை சேர்ந்த நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி கைதாகி தற்போது சிறையில் இருக்கின்றனர். இச்செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போதைப்பொருள் சர்ச்சை தற்போது பாலிவுட் சினிமா துறையையும் உலுக்கி வருகிறது. இதுகுறித்து Narcotics Control Bureau NCB சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் பெயர் சம்பந்தப்பட்டிருந்தது. இதனால் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கரிஷ்மா பிரகாஷுக்குச் சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர் .

சமீபத்தில் கரிஷ்மா பிரகாஷின் அபார்ட்மெண்டில் நடந்த சோதனையில் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அக்டோபர் 27-ம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி கரிஷ்மாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்று கரிஷ்மா விசாரணைக்கு வரவில்லை. ஏன் வர முடியவில்லை என்பது குறித்த விளக்கமோ தகவலோ அதிகாரிகளுக்குத் தரவில்லை.

இந்நிலையில் கரிஷ்மா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கரிஷ்மா பணியாற்றும் க்வான் நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் தன் வீட்டிலிருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரிஷ்மா முன்ஜாமீன் கோரியிருக்கிறார்.

ஏற்கெனவே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொபைல்களையும் பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான சபாக் திரைப்படம் தீபிகாவுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. கபீர் கான் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 83 படத்தின்  தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டார் தீபிகா படுகோன். இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஷாகுன் பத்ரா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தீபிகா.