கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் உலகநாடுகள் அனைத்தும் லாக்டவுனை கடைப்பிடித்தது. இதன் காரணமாக வீட்டிலே முடங்கியிருந்த பிரபலங்கள் வீட்டில் இருந்தே தங்களது திறமையை வெளிப்படுத்த துவங்கினர். உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து அப்போது தான். 

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு நிகராக வார்னரும் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது என பிஸியாகியது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் மைதானத்திலும் இந்திய சினிமா பாடல்கள் வந்தால், அதற்கு சற்றும் தயங்காமல் நடனமாடி ஈர்த்து வருகிறார் வார்னர். சமீபத்தில் கூட மைதானத்தில் ஒலிக்கப்பட்ட புட்ட பொம்மா பாடலுக்கு ஸ்டெப்ஸை போட்டார் வார்னர். 

தற்போது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்திய அணி வென்றாலும், போட்டியில் வார்னர் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருந்தது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது வார்னரின் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். 

காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் வார்னர், ஓய்வு எடுக்காமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேஸ்-ஆப் மூலம் நடிகர்களின் முகத்தில் தன் முகத்தை மாற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சூர்யா நடித்த 24 படத்தின் மாஸான காட்சிக்கு தன் முகத்தை எடிட் செய்து பகிர்ந்துள்ளார் வார்னர். இந்த வீடியோ பதிவு சூர்யா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சூர்யா நடித்த ஆத்ரேயா பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது ஆத்ரேயாவாக அவதாரம் எடுத்துள்ள வார்னருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். 

இந்திய சினிமா உலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படத்திற்கான பணிகளும் போய் கொண்டிருக்கிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)