இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அசத்தி வருகிறார். இதில் பிரபல கிரிக்கெட் வீரர்களை அடிக்கடி பேட்டி காண்கிறார். தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் உரையாடினார். அப்படி சமீபத்தில் ஜவகல் ஸ்ரீநாத்தை அஸ்வின் பேட்டியெடுத்துள்ளார்.

பேட்டி முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது, உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று நடிகர்கள் யார்? என்று அஸ்வின் கேட்க, அதற்கு அமிதாப் பச்சன், ஷாரூக் கான் மற்றும் ரஜினிகாந்த் என்று ஜவகல் ஸ்ரீநாத் பதிலளித்தார். ஏன் ரஜினி பிடிக்கும்? என அஸ்வின் கேள்வியை முன்வைத்தார். 

அதற்கு பதிலளித்த ஸ்ரீநாத், நம் வாழ்க்கைக்கு ரஜினிகாந்த் அற்புதமான ஆற்றலைக் கொண்டு வருகிறார் என நான் நினைக்கிறேன். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ரஜினியின் திரைப்படத்தைப் பாருங்கள். முழு உற்சாகத்தோடு திரும்ப வருவீர்கள். அவர் படங்களில் எங்கோ அடிமட்டத்திலிருந்து வந்து உயர்வார். அவரது திரை ஆளுமை, அவரிடம் இருக்கும் கூடுதலான ஒரு ஈர்ப்பு, திரைப்படங்களுக்கு அவரால் சேரும் உயிர்ப்பு என எல்லாமே காரணம். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு சில முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். தனது காரில் என்னை ஏறும்படியும், எங்கு செல்ல வேண்டுமோ இறக்கிவிடுகிறேன் என்றும் சொன்னார். அவரது கனிவே அது. அதைத்தான் சொல்கிறேன். உங்கள் நாள் மோசமாக இருந்தால், ரஜினிகாந்தின் திரைப்படத்தைப் பாருங்கள் என்று ஸ்ரீநாத் பதில் சொன்னார்.

தர்பார் திரைப்படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. 

இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.