தமிழில் ஜெயம்கொண்டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் R.கண்ணன். தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ஜப் வி மெட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக நடிகர் பரத் மற்றும் நடிகை தமன்னா இணைந்து நடித்த கண்டேன் காதலை படத்தை இயக்கினார். தொடர்ந்து ஜீவாவின் வந்தான் வென்றான் மற்றும் ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதனையடுத்து தயாரிப்பாளராகவும் களம் இறங்கிய இயக்குனர் R.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இவன் தந்திரன். பூமராங். பிஸ்கோத் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். அடுத்ததாக நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த தள்ளிப்போகாதே மற்றும் நடிகர் நகுல் நடித்த எரியும் கண்ணாடி ஆகிய திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அடுத்ததாக 1970களில் மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா எனும் நகைச்சுவை திரைப்படத்தை ரீமேக் செய்கிறார். R.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து MKRP புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் காசேதான் கடவுளடா திரைப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு மற்றும் சிவா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். 

மேலும் நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி சிவாங்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இன்று காசேதான் கடவுளடா படம் பூஜையோடு தொடங்கப்பட்டது. நடிகர்கள் யோகிபாபு, தலைவாசல் விஜய், சிவாங்கி, ப்ரியாஆனந்த், சிவா ஆகியோர் கலந்து கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.