தொலைக்காட்சி வரலாற்றிலேயே எந்த ஒரு ரியாலிட்டி ஷோவும் பெறாத மாபெரும் இமாலய வெற்றியை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் வெளிவந்த “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை பவித்ரா லக்ஷ்மி தற்போது சமூக வலைதளங்களில் பின்பற்றும் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான பவித்ர லக்ஷ்மி தொடர்ந்து கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் சில குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். 

அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர் உடன் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ர லக்ஷ்மியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் நிறைய போலி கணக்குகள் பவித்ர லக்ஷ்மியின் பெயரில் தொடங்கப்பட்டு உலா வருவதைக் கண்ட நடிகை பவித்ர லக்ஷ்மி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, “இதுவே என்னுடைய உண்மையான ட்விட்டர் பக்கம்  இதை மட்டுமே ரசிகர்கள் பின்பற்றவும். இதைத் தவிர என் பெயரில் இருக்கும் மற்ற போலி கணக்குகளில் பதிவிடப்படும் எந்த பதிவுகளுக்கும் நான் பொறுப்பல்ல” என தெளிவாக தெரிவித்துள்ளார். பல பிரபலங்களுக்கும் பல சமூக வலைதள பக்கங்களில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு பரவி வரும் இந்த சூழலில் பவித்ர லக்ஷ்மி இவ்வாறு முன்வந்து பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.