தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி இன்று திடீரென உடல் நல குறைவால் காலமானார். அவரது திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எஸ்பிபி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடிவேல் பாலாஜியின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பதினைந்து நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு அவர் அறுத்தால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஸ்ட்ரோக் காரணமாக அவரது இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். 

அவர் சிகிச்சைக்கு பணம் இன்றியும் கஷ்டப்பட்டதாகவும், அதனால் அவரது குடும்பம் அதிகம் அவதிப்பட்டதகவும் கூறப்படுகிறது. டிவி பிரபலங்களும் கூட பலரும் சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார்கள். வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருக்கிறார்கள். மிக இளம் வயதில் வடிவேல் பாலாஜி இறந்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த பாலாஜியின் டைமிங் காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் காமெடி மற்றும் ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய ரோலில் வந்து அசத்தினார். 

இது வரை நம்மை அதிகம் சிரிக்க வைத்தவரின் மரணம் சோகத்தை கொடுத்திருக்கிறது என பலரும் தெரிவித்து வருகிறார்கள். பல திரைப்பிரபலங்கள் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.