இயக்குநர் ஸ்ரீனாத் ராமலிங்கம் இயக்கிவரும் திரைப்படம் அன்புள்ள கில்லி. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம். 

தனது முதல் படமான உனக்கென வேணும் சொல்லு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் ஸ்ரீனாத், படத்தின் கதைக்களம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் நடக்கவுள்ளதாகத் தெரிவித்தார். படத்தின் கதையை நாய் கூறுவதுபோல் இயக்குநர் அமைத்துள்ளாராம். இப்படத்திற்கு பிசாசு திரைப்பட புகழ் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். 

Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் வரும் லாப்ரடார் வகை நாய்க்காக நடிகர் சூரி குரல் தந்துள்ளார். இதற்கான டப்பிங் பணிகளை அவர் இன்று செய்து முடித்தார் என்ற தகவல் வெளியானது. 

சமீபத்தில் வெளியான லைன் கிங் படத்தில் வரும் ஐந்து அறிவு ஜீவன்களுக்கு நடிகர்கள் சித்தார்த், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், மனோபாலா ஆகியோர் குரல் தந்தது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டிலும் இதே பாணியில் பெரிய நடிகர்கள் கார்ட்டூன் கேரக்டர்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றுக்கு டப்பிங் செய்து வருகின்றனர். 

அன்புள்ள கில்லி படத்தில் சூரியின் குரலை கேட்க ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.