அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார் படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ்,ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. இந்த படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் பாடல் சில நாட்கள் முன்பு வெளியாகி அசத்தி வருகிறது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அப்யங்கர் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து எழுதியுள்ளனர். 

இந்நிலையில் இப்பாடலை நேற்று சிறுமி  சஹானா  கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். சஹானா பிறவியிலேயே கண்பார்வையற்ற சிறுமி. அவர் ஜீ தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர். அவரின் கீ-போர்டில் வாசித்த பாடல் வந்த சற்று நேரத்திலேயே எல்லாராலும் பாரட்டப்பெற்று பகிரப்பட்டது. அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்தது. நேற்று இரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும்  சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார். கோப்ரா படக்குழுவினரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர் சியான் ரசிகர்கள். 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் லலித்குமார் XB பிலிம்ஸுடன் இணைந்து மாஸ்டர் படத்தையும் தயாரித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் சியான் 60 திரைப்படத்தையும் இவர்கள் தான் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.