கொரோனா காலகட்டம் என்பதால் மாஸ்டர், சுல்தான், கர்ணன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர மற்ற படங்கள் திரையரங்குகளில் காற்று வாங்குகின்றன. தயாரிப்பாளர்கள் ஓடிடி, தொலைக்காட்சி என்று மாற்றுப் பாதையில் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. நாளை சர்பத் திரைப்படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள-யும் தொலைக்காட்சியில் வெளியாகிறது. மோகன்லாலின் த்ரிஷ்யம் 2, ஃபகத் பாசிலின் ஜோஜி என முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.

சியான் விக்ரமின் கோப்ராவும் அப்படி நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாவதாக காலையிலிருந்து ஒரு தகவல் உலாவி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு, அரசாணையை வெளியிட்ட நிலையில், நெட்பிளிக்ஸில் கோப்ரா என்ற வதந்தியை பலரும் உண்மை என்றே நம்பினர்.

நல்லவேளையாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ஃபேக் நியூஸ் என்று மறுப்பு தெரிவித்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் சியான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு ரஷ்யாவில் நடந்து முடிந்தது. படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடினர் சியான் ரசிகர்கள்.