நாம் விரும்பும் நடிகர்களை அவரது மூன்றாம் கண்(கேமரா) பார்வையின் மூலம் படம்பிடித்து விழிகளுக்கு விருந்தளிக்கும் பணியை செய்யும் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவி வர்மன். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர்,  திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது. 

இந்நிலையில் ரவி வர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், காற்று வெளியிடை படத்தின் அரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கார்த்தி ஜீப்பில் அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தை அசத்தி வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காற்று வெளியிடை. கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் ரவி வர்மன் தான் ஒளிப்பதிவாளர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர்.கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

கொரோனா காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மணிரத்னம் ஒரு பேட்டியில் முன்பு கூறி இருந்தார். காரணம் இது வரலாற்று படம் என்பதால் அதிக அளவு துணை நடிகர்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு காட்சியிலும் சில நூறு பேர் இருப்பது போலத்தான் இருக்கும். அதனால் இனி ஷூட்டிங் நடத்துவது பெரிய சவால் என மணிரத்னம் தெரிவித்து இருந்தார்.