தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனராக தனது ஒவ்வொரு படைப்புகளாலும் மக்களிடையே மிகப்பெரிய மதிப்பைப் பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனை அடுத்து கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை ஜல்லிக்கட்டு பற்றி பெரிதும் பேசப்படாத பக்கங்கள் குறித்து பேசவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ஒரு படம், தளபதி விஜய் உடன் ஒரு படம், இயக்குனர் அமீருடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் என வெற்றிமாறனின் அடுத்தடுத்த படைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்க, இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த புதிய வெப் சீரிஸில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான PC.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “எனது அடுத்த ப்ராஜெக்ட் இயக்குனர் வெற்றிமாறனுடன். அவர் இயக்கி உருவாக்கும் இந்த வெப் சீரிஸ் ZEE 5 தளத்திற்காக தயாராகிறது. முன்னணி கதாபாத்திரங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என PC.ஸ்ரீராம் அவர்கள் தெரிவித்துள்ளார். முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறனுடன் ஒளிப்பதிவாளர் PC.ஸ்ரீராம் இணைவதால் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. PC.ஸ்ரீராம் அவர்களின் அந்த பதிவு இதோ…
 

My next project will be with Director#Vetri Maaran .
It will be for a web serial written and show run by him for #Zee5.
Major cast & other details will be announced soon .

— pcsreeramISC (@pcsreeram) December 6, 2022