திரை உலகில் உள்ள ஒவ்வொரு நாயகர்களுக்கும் அவர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். ஒட்டுமொத்தமாக சினிமாவை ரசிக்கும் மக்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவராக அனைத்து ரசிகர்களின் இதயங்களிலும் இடம் பிடித்தவர் தான் நடிகர் சீயான் விக்ரம். படத்திற்கு படம் வித்தியாசமான சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து நடிப்பின் அரக்கனாக விக்ரம் வலம் வருகிறார்.

தற்போது தமிழ் திரையுலகில் சீயான் விக்ரமுக்கு கிடைத்திருக்கும் இந்த இடம் மிகவும் தாமதமான ஒன்றுதான். கடந்த 1990ஆம் ஆண்டு “என் காதல் கண்மணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விக்ரம் தனது 2-வது திரைப்படத்திலேயே தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் “தந்துவிட்டேன் என்னை” திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதரின் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் ஆரம்பகட்டத்தில் விடாமுயற்சியோடு நடித்துவந்த நடிகர் விக்ரமின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது. இப்படத்திற்காக தனது முதல் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்ற விக்ரம் மீது ஒட்டுமொத்த திரை உலகின் கவனமும் திரும்பியது.

அடுத்தடுத்து தில், காசி, ஜெமினி என சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த விக்ரம் பின்னர் தூள், சாமி, அந்நியன் என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுக்கத் தொடங்கினார். அதேசமயம் சிறந்த நடிகராக பிதாமகன் ராவணன், தெய்வத்திருமகள், ஐ ஆகிய திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் அள்ளிக் குவித்தார்.

இந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் விக்ரம் நடிப்பில் இதுவரை வெளிவந்த மகான் & கோப்ரா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆல் டைம் ரெக்கார்ட் ஆக வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆதித்த கரிகாலனாக வழக்கம்போல் விக்ரம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தார்.

 அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுடன் கைகோர்க்கும் விக்ரம், கேஜிஎஃப் மையப்படுத்தி பிரம்மாண்டமான பீரியடு திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகும் #Chiyaan61 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே தனது திரைப்பயணத்தில் தற்போது 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் விக்ரம்.

எனவே ரசிகர்களும் திரை பிரபலங்களும் விக்ரமுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். சீயான் விக்ரமின் அந்த பதிவு இதோ…
 

இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL

— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022