நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.

நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, நேற்று முன்தினம், வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஊசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, நடிகர் விவேக் குணமடைய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப் பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அவரது நண்பரும், நடிகருமான சியான் விக்ரம் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்; என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன்  விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். 

ஒரு நிகழ்ச்சியில் கூட சியான் எனது நெருங்கிய நண்பர். அவர் கென்னியாக (விக்ரமின் பெயர்) டப்பிங் ஆர்டிஸ்ட்டாக சினிமா வாய்ப்பு தேடும் இருந்த காலத்திலே, அவர் கடந்த வந்த பாதையை பற்றி மறைந்த நடிகர் விவேக் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து தூள், தில் போன்ற படங்களில் நடித்திருப்பார்கள்.