இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். ஆதித்ய வர்மா படம் நல்ல வசூலையும் ஈட்டியது. சிறந்த அறிமுக நாயகன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றார் துருவ். 

1995ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடிகர் விக்ரம் மற்றும் சைலஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் துருவ். இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வரும் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். பிரபல நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பிறந்தநாள் காமன் DPயை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வது போலவே நடிகர் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சியான் விக்ரம் ரசிகர்கள் காமன் DPயை வெளியிட்டு ட்ரெண்ட் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் துருவ் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். தனது அப்பாவை போலவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் அவர் பைசெப்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெமினி படத்தில் வரும் சியான் விக்ரம் போல் தாடியுடன் காணப்படுகிறார் என கமெண்ட் செய்தனர் ரசிகர்கள். 

தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், விரைவில் படப்பிடிப்பு பணிகளில் இறங்குவார் என தெரிகிறது. இந்நிலையில் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு செவன் ஸ்கிரீன் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துகூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் துருவ் ரசிகர்கள். 

சமீபத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தை ஈர்த்தது. அதில் கட்டுடலுடன் காணப்படுகிறார் துருவ். சியான் 60 படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே படத்திற்கான கேரக்டருக்கு தயாராகிறாரா துருவ் என கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். படத்திற்கு படம் தன்னை வருத்திக்கொண்டு, அந்த பாத்திரமாகவே மாறும் திறன் கொண்டவர் சியான் விக்ரம். அவரது பாணியை துருவ் கடைபிடிப்பது பாராட்டிற்குரியது.