கடந்த 44 ஆண்டுகளாக 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராகவும், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும், பல கோடி தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில், அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக சிரஞ்சீவி நடித்திருக்கும் போலா ஷங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரபல இளம் தெலுங்கு இயக்குனர்களான பாபி மற்றும் வெங்கி குடுமலா ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார் சிரஞ்சீவி.

இதனிடையே மோகன்லாலின் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக மெகாஸ்டார் நடித்துவரும் திரைப்படம் காட்ஃபாதர். வரும் அக்டோபர் 5-ம் தேதி காட்ஃபாதர் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவில், S.தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காட்ஃபாதர் படத்தின் முதல் பாடலான தார் மார் டக்கர் மார் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியானது. இந்தப் பாடலுக்கு நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அசத்தலான அந்த பாடல் ப்ரோமோ இதோ…