தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் திகழ்ந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். நடிப்பு அல்லாது இயக்கம், தயாரிப்பு, மிமிக்ரி என பன்முகம் கொண்டவர் சின்னி ஜெய்ந்த். உச்ச நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்துள்ளார். 

ராஜா சின்ன ரோஜா, கிழக்கு வாசல், இதயம், வெற்றி விழா, கண்ணெதிரே தோன்றினாள் இந்த படங்களில் சின்னி ஜெயந்தின் நடிப்பு இன்றும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். நடிகர் சின்னி ஜெயந்த் உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கானல் நீர் என்ற படத்தின் மூலம் நடிகர் ஜேகே ரித்திஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சின்னி ஜெயந்த்.

இந்நிலையில் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 829 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடமும் பெற்றுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறையினரும் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

25 வயதாகும் ஸ்ருதன், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதில் முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவை சந்தித்த ஸ்ருதன், இரண்டாவது முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நடிகர் சின்னி ஜெயந்த் கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு காட்சியில் தோன்றியிருந்தாலும், ரசிக்கும் வகையில் நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். நடிகர் சின்னி ஜெயந்தின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.